திருவட்டாறு

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில்

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் திருவட்டாறு எனும் ஊரில் அமைந்துள்ள ‌ஒரு பழைமையான வைணவக் கோயிலாகும். இது 108 வைணவத் திருத்தலங்களுள் 76 ஆவதாக வைத்து எண்ணப்படுகிறது. மேலும் இது 13 மலைநாட்டுத் திருத்தலங்களுள் ஒன்றாகும்.

திருவட்டாறு - பெயர்க்காரணம்
இந்த ஊரின் நடுவில் பள்ளி கொண்டிருக்கும் ஆதி கேசவ பெருமானின் திருவடிகளை வட்டமிட்டு பரளியாறு ஓடுவதால் இந்த ஊா் திருவட்டாறு எனும் பெயர் பெற்றது. மாராமலையில் உற்பத்தியாகி மேற்கு நோக்கி ஓடும் பறளியாறு மற்றும் வடகிழக்கு பகுதியாக ஓடும் கோதையாறும் ஒன்று சோ்ந்து மீண்டும் ஒரே ஆறாக உருவெடுக்கும் இடம் "மூவாற்று முகம்" (மூன்று + ஆறு + முகம்) எனப்படும். இவ்வாறு இறுதியில் அரபிக் கடலில் கலக்கிறது.

கோவிலின் சிறப்புகள்
இத்தலம் சேரநாட்டு முறையில் கட்டப்பட்டு உள்ளது. கோவிலுக்குள் நுழையும் ஆடவர் அனைவரும் இறைவனுக்கு மரியாதை தரும் பொருட்டு தங்கள் சட்டைகளைக் கழற்றியே நுழைய வேண்டும். ஆதிசேடனைப் படுக்கையாகக் கொண்டு அறிதுயிலில் ஆழ்ந்துள்ள பெருமாளின் திருமேனி 22 அடி நீளம் உடையது. இது 16,008 சாளக்கிராமக் கற்களைக் கொண்டு செய்யப்பட்ட சடுசக்கரை படிமம் என்று சொல்லப்படுகிறது. கருவறையில் மூன்று நிலைவாயில்கள் உள்ளன. திருமுகம், திருக்கரம், திருப்பாதம் எனும் 3 பகுதிகளை ஒவ்வொரு நுழை வாயிலிலும் காணலாம். திருமுக நிலைவாயிலில் அறிதுயிலில் ஆழந்துள்ள முகத்தையும் நீட்டிய இடக்கையையும் ஆதிசேடனையும் கருடாழ்வாரையும் காணலாம். திருக்கர வாயிலில் சின்முத்திரை காட்டும் வலக்கரத்தையும் சங்கு சக்கரம் உள்ளிட்ட ‌ஐம்படையினையும் காணலாம். தரையில் தாயாருடன் கூடிய பெருமாளின் உலோகத் திருமேனியும் வைக்கப்பட்டுள்ளது. கடைசியாக திருப்பாத வாயிலில் திருப்பாதங்களையும் இருவர் பயந்து ஒளிந்திருக்கும் சிலைகளையும் காணலாம். திருமுகம், திருக்கரம், திருப்பாதம் இவ‌ற்றை இதே வரிசைக்கிரமத்தில் தரிசிப்பது இக்கோவிலின் மரபு ஆகும். இக்கோயிலின் பிரதான வாயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது.

மங்களாசாசனம்
இத்தலத்தை நம்மாழ்வார் 11 பாடல்களால் மங்களாசாசனம் செய்துள்ளார். “உண்டு உறங்கி சாதாரண வாழக்கை வாழும் நாட்டினரோடு இருப்பதை விடுத்து இறைவ‌னின் பாடல்களைப் பலவாறாய்ப் பாடி பழவினைப் பற்றறுத்து ஆதிகேசவன் எனும் திருப்பெயருடன் எழுந்தருளியுள்ள நாரணன் திருவடிகளை இவ்வாற்றாட்டில் வணங்கிப் பிறப்பறுப்பேன் எனும் பொருளமைந்த பாடல் இவற்றுள் ஒன்றாகும்”

தலபுராணம்
பரந்தாமன் ஆதிகேசவபெருமாள் என்பது 'மிகவும் முக்கியமான நண்பனைக்' குறிப்பதாகும். தலபுராணங்களின் கூற்றின் படி பரந்தாமன் ஆதிகேசவபெருமாள் கேசி என்ற பெயருடைய அரக்கனை வீழ்த்தியதாக ஐதீகம். அரக்கனின் மனைவியானவள் கங்கை ஆறு மற்றும் தாமிரபரணி ஆற்றின் தேவதைகளை வணங்கி ஒரு பெரிய பிரளயத்தையே வரவழைத்து விட்டாள். ஆனால் இது ஒரு விதத்திலும் பயனளிக்கவில்லை மேலும் அவள் ஈசனிடம் சரணடைந்து விட்டாள். இப்படியாக வட்டமாக நதிகள் இந்த இடத்தை சூழ்ந்து கொண்டதால், இந்த இடத்திற்கு திருவட்டாறு என்ற பெயர் அமைந்தது.