மருந்துவாழ் மலை
இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரியிலிருந்து நாகர்கோயில் செல்லும் சாலையில் (NH47) 9 கி.மீ தொலைவில் வளர்ந்தோங்கி பலவகையான மருந்துச்செடிகளும், மூலிகைகளும் நிறைந்துள்ள இம்மலை 'மருந்துவாழ்மலை' என்று அழைக்கப்படுகிறது.
மருந்துவாழ்மலையின் சிறப்பு : கடல் மட்டத்திலிருந்து சுமார் 1800 அடி உயரமும், 625 ஏக்கர் நிலப்பரப்பும் கொண்டது இம்மலை. பல முனிவர்கள் தங்கி தவம் புரிந்த பெருமையினையுடையது. இந்துமாக்கடல், அரபிக்கடல், வங்கக்கடல் ஆகிய முக்கடலும் சங்கமமாகும் கன்னியாகுமரிக்கு அருகில் மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக மேற்கே தலை வைத்து, கிழக்கே கால் நீட்டி, நீண்டு நிமிர்ந்து நிற்கும் மலை மருந்துவாழ்மலையாகும். அகத்திய முனிவர், அத்திரி முனிவர், பரமார்த்தலிங்கேஸ்வரர், தேவேந்திரன் வரை புனிதத் தவம் மேற்கொண்ட பெருமையினை உடையதாகும். இன்றும் இங்கு பல சித்தர்கள் மலையின் குகைகளில் வசிப்பதை காணலாம்
இம்மலையின் மேல் நின்று பார்த்தால் இயற்கையன்னை பச்சையாடை போர்த்தி பளபளக்கும் திருக்கோலக்காட்சியை காணலாம். மேலும் கடல் சூழ்ந்து இருப்பதையும் காணலாம். பாரதத்தாயின் பாதக்கமலமாகிய குமரி முனையின் அழகையும் , தொன்மையையும், சிறப்பையும், இயற்கை வளத்தையும் கண்டு இன்புறுவதோடு இம்மலையின் மாண்பையும் உணர்ந்து கொள்ள முடியும்.
மலை தோன்றிய வரலாறு : முன்னொரு காலத்தில் அயோத்தியை ஆண்ட தசரத மன்னனின் புதல்வனான ஸ்ரீராமனுக்கும், இலங்கை அரசனான ராவணனுக்கும் இடையே போர் நடந்து கொண்டிருந்தது. அந்த போரில் ஏராளமான படைவீரர்கள் இறந்தனர். லட்சுமணனை எதிர்த்து அசும்பன் என்பவன் போர் செய்து இறந்துபோனான். இதனால் பெருங்கோபம் கொண்ட ராவணனின் மகனான மேகநாதன் (இந்திரஜித்) தன்னுடைய பாணமான பிரம்மாஸ்திரத்தை எதிரிகள் மீது ஏவ, அங்கிருந்த லட்சுமணன் உள்ளிட்ட படையினர் மூர்ச்சையற்றுக் கீழே விழுந்தனர். இதை அறிந்த ராமன் கலக்கமுற்றார்.
அப்போது ராவணனின் தம்பியாகிய விபீஷ்ணன், ராமனிடம் 'இந்தப் பிரம்மாஸ்திரம் தன்னைப் படைத்த பிரம்மனையும் அழிக்க வல்லது. சஞ்சீவி மலையில் சல்லிய கரணி, சந்தன கரணி, சஞ்சீவி கரணி, சமய கரணி என்னும் நான்கு மூலிகைகள் உள்ளன. இவைகளுள் ஒன்று காயத்தை மாற்றும், மற்றொன்று அறுபட்ட உறுப்பைப் பொறுத்தும், இன்னொன்று பெருமூச்சை அகற்றும், பிறிதொன்று உயிர் கொடுக்கும். இந்த நான்கு மூலிகைகளைக் கொண்டு வந்தால் மட்டுமே இவர்கள் உயிர் பிழைப்பர். ஆனால் அந்த மருந்து இருக்கும் இடத்தில் விஷ்ணுவின் சக்கரம் காவலுக்கு உள்ளது. இதுவரை அந்த மூலிகைகளை கண்டு பறித்து வந்தவர் யாரும் இல்லை. அவற்றைக் கொண்டு வர வாயுவின் மகனாகிய அனுமனே தகுதியானவர்' என்றார்.
இதைக்கேட்ட அனுமன் ராமனை வணங்கி, ராம நாமத்தை உச்சரித்துக் கொண்டே சஞ்சீவி மலை நோக்கி விரைந்தார். போன வேகத்தில் மூலிகைகளின் பெயர் மறந்துவிட, அங்கிருந்த மலையை அப்படியே அடியோடு பெயர்த்துக் கொண்டு வந்தார்.
மூலிகைகளின் வாசம் பட்டதும் லட்சுமணன் உள்ளிட்ட அனைவரும் மூர்ச்சை நீங்கி தெளிவு பெற்றனர். இதைக்கண்ட ராமன் உள்ளிட்ட அனைவரும் அனுமனை புகழ்ந்தனர். பின்னர் சஞ்சீவி மலையை இருந்த இடத்திலேயே வைக்க அனுமன் கொண்டு சென்றார்.
அவ்வாறு கொண்டு செல்லும்போது மலையிலிருந்து சிறு பகுதி உடைந்து கீழே விழுந்தது. அந்த இடம்தான் இதமான மூலிகை மணம் பரப்பிக் கொண்டிருக்கின்ற மருந்துவாழ்மலை.
திருவிதாங்கூர் மன்னர் வந்தபோது மலையில் ஏறிச் செல்வதற்கு வசதியாக படிகள் அமைக்கப்பட்டன. மலையின் மேல் பகுதியில் 200 அடி உயரத்தில் பக்தர்கள் அமர்ந்து தியானம் செய்வதற்கு அழகிய மண்டபம் உள்ளது. மலையடிவாரத்தில் தெப்பக்குளமும் உள்ளது .
சிறப்புகள் : தெய்வீக மர்மங்கள் நிறைந்த மலை, மருந்துவாழ் மலை. இம்மலையில் பிரணவ சஞ்சீவி, அமிர்த சஞ்சீவி, ஜீவசஞ்சீவி உள்ளிட்ட ஏராளமான உயிர் காக்கும் மூலிகைகள் உள்ளன. மேலும் எந்த மலையிலும் கிடைக்காத பல அபூர்வ மூலிகைகளும் உள்ளன. இந்த மூலிகைகள் பலவிதமான நோய்களை தீர்க்கும் ஆற்றல் கொண்டவையாகத் திகழ்கின்றன. இம்மலையில் இருந்து வீசும் காற்றைச் சுவாசிக்கும் போது உடலில் புது சக்தி தோன்றுகிறது. ஆஸ்துமா நோய் வராமலும் தடுக்கின்றது. இதனால் ஏராளமான பொதுமக்கள் இங்கு வந்து சமைத்து சாப்பிட்டு, மூலிகைக் காற்றைச் சுவாசித்து, உடல் ஆரோக்கியத்துடன் திரும்பிச் செல்வதை தினமும் காணமுடிகிறது. இம்மலையில் உள்ள மூலிகை இலைகளை பறித்து மலையிலே வைத்து சாப்பிடும் போது கசப்புத்தன்மை இல்லாமலும், மலைக்கு வெளியே கொண்டு வந்து சாப்பிடும் போது கசப்புத்தன்மையுடன் இருப்பது இம்மலையில் உள்ள மூலிகைகளின் தனிச்சிறப்பாகும்.
இறுதியாக இம்மலையில் தவம் புரிந்து பெருமை உற்றவர்களில் அய்யா வைகுண்டநாதரும் ஒருவராவர். அவர் 'பிறைசூடும் பெருமாள்' என்ற நாமத்தோடு பிறந்து பல ஆண்டுகள் மருந்துவாழ் மலையில் தவம் மேற்கொண்டு சிவதுதி பாடி அடிமைத்தளத்தில் இருக்கும் ஒரு சமூகத்தை மீட்டதால் அவரை திருமாலின் அவதாரமாக எண்ணி மக்கள் அய்யா வைகுண்டநாதர் என்றே அழைத்தனர். அவர் தவம் இயற்றிய இடம் மருந்துவாழ்மலையின் அடிவாரத்தில் உள்ளது. இது இன்று 'வைகுண்டபதி' என்று அழைக்கப்படுகிறது. அய்யா ஏற்படுத்திய 7 பதிகளில் இது முதன்மையானது .
அருள் நூல் சாட்டு நீட்டோலைப் பகுதியில் "வைகுண்டப் பதியிலே கைகண்ட வேதாவைப் போல் வாழவும் பாவித்தாயே சிவனே அய்யா"
பொருள் : வைகுண்டபதியிலே வாழும் வேதத்தை கற்றுணர்ந்த திருமாலைப் போல் உணர்ந்து வாழ வைத்தாயே சிவபெருமானே. என்று கூறுவது நோக்கத்தக்கதாகும்.
அவர் இம்மலையை பற்றி சாட்டு நீட்டோலையில் "வருடியிருப்பதாலே மருந்து வாழ் மலையில் மருந்து வளரலாச்சே சிவனே அய்யா" என்று கூறியுள்ளார்.
அகிலத்திரட்டு என்னும் நூல் இம்மலையைப் பற்றி "நாடு குற்றங் கேட்க நல்லதவம் செய்வதற்குத் தேடும் வடவாசம் சீவிவளர் மலையில் நேரும்வாசல் தனக்கு நிகரில்லை யாமெனவே உபசீ வனம்வளரும் உகந்த புவிஈதெனவே என்று மனதில் எண்ணி என்றன் பெருமாளும்" என்று கூறுகிறது.
பிள்ளைத்தடம் : ஆதிமுனிவர் அகஸ்தியர், அத்திரி முனிவர், பரமார்த்தலிங்கேஸ்வரர், தேவேந்திரன், அய்யா வைகுண்டநாதர் முதலிய தவ முனிவர்கள் தவம் மேற்கொண்ட இடம் பிள்ளைத்தடம் என்று அழைக்கப்படுகிறது மலையின் உச்சியிலிருந்து கீழ்நோக்கி செல்லும் குகையே பிள்ளைத் தடமாகும். இங்குள்ள மணலை கையால் நிரப்பாக்கி சமப்படுத்தி தியானத்தில் இருந்து கொண்டு மணலை உற்றுப் பார்த்தால் முருக பெருமான், வேல், மயில் போன்ற உருவங்கள் தெரியுமென்று முன்னோர்கள் கூறுவர்.
இந்திரன் சாபம் நீங்கிய வரலாறு : கௌதம முனிவரின் மனைவி அகலிகை மேல் மையம் கொண்ட இந்திரன் கௌதம முனிவரின் சாபத்திற்கு ஆளானார். இதனால் இந்திரன் மனம் வருந்தி முனிவரின் காலில் விழுந்து வணங்கி சாபவிமோசனம் அருள வேண்டினார். முனிவரும், மும்மூர்த்திகளும் ஒன்றாக இருக்கும் போது அவர்களை வணங்கினால் புனிதம் பெறுவாய் என்று அருளினார். இம்மும்மூர்த்திகளை வணங்க இந்திரன் இம்மலையில் வந்து தவம் இயற்றி, சுசீந்திரத்திலுள்ள தாணுமாலயப்பெருமாளை வணங்கி சாப விமோசனம் நீங்கப்பெற்றார்.
அபூர்வ மூலிகைகள் : அகஸ்தியர் தீட்சா விதி 200 என்ற நூலில் பல மூலிகைகள் பற்றிக் கூறப்படுகின்றன. அவற்றில் ஒன்று எடுத்துக்காட்டாக கூறப்பட்டுள்ளது.
"ஏறுதற்கு இன்னமொரு வகையைக்கேளாய் இயல்பாக குமரிக்கு மேற்கேயப்பா கூறுவர் உலகத்தோர் மருத்துவமலையென்று குறித்துவைத்த மருந்ததனை அறியமாட்டார் தேறுவாய் அம்மருந்தை அறிவதற்குச் செய்தியொன்று சொல்லக்கேள் மேற்கதாக ஏறுவாய் அம்மலையின் உச்சிதனில் இருக்குதடா சுனையொன்று இருக்கும்பாரே இருக்கின்ற சுனைக்குள்ளே பனைப்பாஷாணம் இயல்பான பனங்குலைபோல் கிடக்கும் பாரு"
இப்பாடல் பனங்குலை பாஷாணம் என்னும் மருந்து எங்கு இருக்கிறது. என்பதை அகத்தியர் கூறியுள்ளார். இதுபோல உயிர்காக்கும் முக்கிய பல மருந்துகள் மலையின் உச்சியிலுள்ள பாலாற்று ஓடையில் காணப்படுகிறது. இப்பாலாற்று ஓடையை ஆகாச கங்கை, கங்காதீர்த்தம் என்றும் அழைக்கின்றனர். மலையின் மூலிகை நீர்கள் மலையடிவாரத்தில் உள்ள சிறிய குளத்தில் கலக்கின்றது. இதில் நீராடுபவர்களுக்கு உடலில் உள்ள பல்வேறு பிணிகள் நீங்கி நலம் பெறுகின்றனர். இம்மலையின் மூலிகை காற்று உயிர்கொல்லி நோயினையும் குணப்படுத்தும் தன்மை கொண்டதாக உள்ளது.
நீர் நிலைகள் : மலை உச்சியில் பாலாற்று ஓடை, கன்னிமார் சுனை, தேவேந்திரன் சுனை போன்ற சுனைகள் உள்ளன. கடல் மட்டத்திலிருந்து 1800 அடி உயரமுள்ள இந்த மலை முகட்டில் உள்ள நீர் நிலைகளில் (சுனைகளில்) கோடை காலத்திலும் நீர் வற்றுவதில்லை. இது இம்மலையின் மாண்பாகும்.
தேவேந்திரன் சுனை : இந்த சுனைக்கு மலை முகட்டிலிருந்து செல்வதை விட ஆலடிவிளை என்னும் ஊரிலிருந்து செல்வது எளிதாகும்.
இம்மலைச் சுனைகளின் நீரினை கோயில் கும்பாபிஷேகங்களுக்கு பயன்படுத்துகின்றனர்.
கோயில் அமைப்பு : மலையடிவாரத்தில் படிகள் அமைக்கப்பட்டுள்ளன. படிகளின் வழியே மேலே ஏறினால் வலப்புறமாக கணபதி, சாஸ்தா, சிவலிங்கம், காளி, முருகப்பெருமான், ஆஞ்சநேயர், நாகம், கண்ணன் ஆகிய சிலைகள் அமைந்த கோயிலொன்று உள்ளது. அதன் மேற்பகுதியில் சிவலிங்க பூசையுடன் மண்டபம் என்று அழைக்கப்படும் கோயில் ஒன்றுள்ளது.
மலைப்பாதையில் பரமார்த்தலிங்கேஸ்வரர் சிவன் கோயில் உள்ளது. இது அகஸ்தியரின் சீடரான பரமார்த்தலிங்க முனிவரின் சமாதி என்று கூறப்படுகிறது. இது ஒரு குகை கோயிலாகும். இங்கு விநாயகர், காசி விஸ்வநாதர், தட்சிணாமூர்த்தி, நாகர், நந்தி முதலிய சிலைகள் காணப்படுகின்றன. கோயிலின் முன்னால் ஒரு கிணறும் காணப்படுகிறது. கோயிலுக்கு சற்று மேலே ஆலும், நாவலும் இணைந்த ஒரு மரம் நிற்கும் இடத்தில் திருமூலர் நினைவுக் குகையும், இதற்கு சற்று மேலே ஆனந்தகிரி ஆஸ்ரமமும், கிழக்கு பக்கம் தியான மண்டபமும் உள்ளது. தியான மண்டபத்தில் அம்மன், அனுமார், அய்யா ஆகிய முக்கூட்டு வழிபாடும் குறிப்பாக ஆஞ்சநேயர் வழிபாடும் நடைபெற்று வருகிறது. பின்னர் விராலிக்குகையும், பாலாற்று ஓடையும் உள்ளது. தற்போது மலையின் மேற்புறத்தில் சிறிய ஆஞ்சநேயர் கோயில் நிறுவபட்டு சிறப்பாக பூசைகள் நடைபெற்று வருகிறது.
நான்கு பருவநிலைகள் ஒரே நாளில் மாறுபடும் பகுதியில் தவம் செய்தால் சித்தி உடனே கிடைக்கும் என்பதன் அடிப்படையில் சித்தி பெற விரும்புகின்றவர்கள் இம்மலையில் வந்து தவம் இயற்றி சித்தி பெறுகின்றனர். பெளர்ணமி அன்று மலையை சுற்றி பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
ஒவ்வொரு வருடமும் திருக்கார்த்திகை அன்று மருந்துவாழ் மலை உச்சியில் தீபம் ஏற்றப்படும். இந்த தீபத்தின் ஒளி பல மைல் தொலைவு வரை தெரியும். அன்றைய தினம் சிறப்பு பூசைகளும் நடைபெறுகின்றன.
கேரளாவில் பிறந்த நாராயணகுரு என்ற மகான் இம்மலையில் தவம் இயற்றி ஞானம் பெற்றார் .
விமானதளம் : திருவனந்தபுரம்
ரயில் நிலையம் : கன்னியாகுமரி
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை