மாத்தூர் தொட்டிப் பாலம்
மாத்தூர் தொட்டிப் பாலம் (Mathoor Aqueduct) தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள இது தெற்கு ஆசியாவிலேயே மிக உயரமான தொட்டிப் பாலமாகும். இது கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒரு பெயர்பெற்ற சுற்றுலாத்தலமுமாகும்.
பெயர் காரணம்
தொட்டி வடிவில் கட்டப்பட்டிருப்பதால் தொட்டிப்பாலம் எனவும், இரு மலைகளுக்கு நடுவே தொட்டில் போன்ற அமைப்பில் இருப்பதால் தொட்டில்பாலம் எனவும் அழைக்கப்படுகிறது.
இதற்கான நீர் பேச்சிபாறை மற்றும் சிற்றாறு அணைகளிலிருந்து கொதையாறு கால்வாய் வழியாக கொண்டுவரப்படுகிறது.
இந்த பாலத்தின் கீழ் பரளியாறு என்ற சிற்றாறு பாய்கிறது.
தண்ணீரைக் கொண்டு செல்வதற்காக மலைப்பாங்கான காடுகளாக இருந்த மாத்தூர் பகுதியில் உள்ள கணியான் பாறை என்ற மலையையும், கூட்டுவாயுப்பாறை என்ற மலையையும் இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
இரண்டு மலைகளை இணைக்கும் இந்தப் பாலம் நீளவாக்கில் 1204 அடியாகவும், தரைமட்டத்திலுருந்து 104 அடி உயரத்திலும் கட்டப்பட்டு உள்ளது. இந்த பாலத்தைத் தாங்கி நிற்கும் ஒவ்வொரு தூணின் சுற்றளவும் 32 அடியாகும். இவ்வாறு மொத்தம் 28 தூண்கள் உள்ளன. தண்ணீர் செல்லும் பகுதிகள் ஏழு அடி அகலமும், ஏழு அடி உயரமும் கொண்ட தொட்டிகளாக தொகுக்கப்பட்டுள்ளன.