கன்னியாகுமரி

கன்னியாகுமரி 

 

குமரி அம்மன் கோவில் - கன்னியாகுமரி

திருத்தல அமைவிடம் : இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில்  குமரி அம்மன் (அ) தேவி கன்னியாகுமரி அம்மன் ஆலயம்  கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரசித்திபெற்ற கோவிலாகும். 
அம்மன் : கன்னியாகுமரி
தீர்த்தம் : சாவித்திரி,காயத்திரி, சரஸ்வதி,கன்யா , விநாயக,பாப விநாசம், பித்ரு,மாத்ரு, ஸ்தாணு 
பீடம் : கன்னிகா பீடம் 
இது தேவியின் பிருஷ்டபாகம் விழுந்த இடம்.

தல சிறப்புகள் :   அம்பாள் கன்னி பகவதியாக முக்கூடல் சங்கமத்தில் அருளும் தலம் இது. இவ்வன்னை பிரகாசமான மூக்குத்தி அணிந்து சிறப்பு பெறுகிறாள். இங்குள்ள குமரிஅம்மன் "ஸ்ரீ பகவதி அம்மன்" "துர்கா தேவி" எனவும் பெயர் பெற்றுள்ளார். இங்கு, அம்மன் குமரி வடிவில் அருள்பாலிப்பதாகக் கூறப்படுகிறது. சக்தி பீடங்களில் இது தேவியின் முதுகுப் பகுதி விழுந்த சக்தி பீடமாகவும் கருதப்படுகிறது.  சக்தி பீடங்களில் முதலில் பைரவரை வணங்குவது மரபு. மூலசாதனத்தில் குமரி அம்மன் தவ கோலம் பூண்டு நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். வல கரத்தில் ருத்ராட்சை மாலையும், இட கரத்தை தொடையின் மீதும், கீரிடத்தில் பிறை நட்சத்திரம், மூக்கில் வைர மூக்குத்தியும் அணிந்து காணப்படுகிறாள். 
குமரி அம்மன் பரசுரமானால் பிரதிஷ்டை செய்யப்பட்ட திருஉருவம். பிரகாரத்தின் தென் கோடில் கணேசர் சன்னதியும் கல்வெட்டும் காணப்படுகிறது. கோவிலின் இடதுபுறமாக 500 மீட்டர் தூரத்தில் இருக்கும் திரிவேணி சங்கமத்தில் ஸ்நானம் செய்துவிட்டு குமரி அம்மனை வழிபடுகின்றனர். கோவிலின் வடக்கு வீதியில் பத்திரகாளியை தரிசிக்கலாம். 1 கி.மீட்டர் வடக்கே காசி விஸ்வநாதர் கோவிலும் சக்கர குளமும் காணலாம்.   

தலச்சிறப்பு : முக்கடலும் கூடும் இடம் குமரிமுனை.  காசி சென்று வழிபட்டோர், கன்னியாகுமரி  வந்து குமரி பகவதியை வணங்க வேண்டும் என்பது சிறந்த விதியாகும். அதிகாலை சூரிய உதயம், மாலை நேரம் சூரிய அஸ்தமனம் காணுதல் தனிப்பெரும் சிறப்பு.   
தல வரலாறு :  முன்னொரு காலத்தில் பாணாசுரன் என்பவன் மூன்று உலகங்களையும் வென்று தேவர்களைத்  துன்புறுத்தி வந்தான்.  அவனுடைய கொடுமைகளைப் பொறுக்க முடியாத தேவர்கள்  சிவபெருமானிடம் சென்று தங்கள் நிலை குறித்து வருந்தி நின்றனர்.  இறைவன் தமது  அருளாற்றலைக் கன்னி பகவதியாக உருவப்பெறச் செய்தார்.  பாணாசுரன் அழகின் உருவான  தேவியைக் கண்ணுற்று அவள் மேல் மையல் கொண்டு தனது வலிமையால் தேவியைக் கவர்ந்து  செல்ல முடிவு செய்தான்.  தனது வாளை உருவிக் பயமுறுத்தினான். அப்போதெல்லாம் அவனது  முடிவு கன்னிப் பெண் ஒருத்தியாலேயே நிகழும் என்ற உண்மையை அவன் மறந்துவிட்டான்.   பராசக்தியான தேவி தன் வாளுடன் அரக்கனை எதிர்த்தான் தலை துண்டிக்கப்பட்டது. இந்தப்  போரை நவராத்திரி விழாவின் போது சிறப்புற நடத்திக் காட்டுகின்றனர் “பரிவேட்டை” என்று அழைக்கப்படும் இத்திருவிழா காண்போருக்கு மகிழ்ச்சியூட்டும் ஒரு நிகழ்ச்சியாகும்.  குமரியம்மன் வாளைக் கொண்டு போராடும் காட்சி இக்கோவில் கருவறையின் கிழக்குச் சுவரில்  படைப்புச்  சிற்பமாகச் செதுக்கப்பட்டு உள்ளது.
தன் குறிக்கோள் நிறைவேறியதும் கன்னி பகவதியார் சுசீந்திரத்தில் எழுந்தருளி இருக்கும்  இறைவனைக் கணவனாக அடைய ஒற்றைக்காலில் தவமிருந்தாள்.  இறைவனும் அவள்  வேண்டுகோளை ஏற்று மணம்புரியத் தீர்மானித்தார்.  திருமணத்திற்கான ஏற்பாடுகள் எல்லாம்  நடந்தேறின.  மணமகன் குறிப்பிட்ட நேரத்தில் வந்து சேரவில்லை என்ற காரணத்தால்  கோபங்கொண்ட தேவியார் தனது ஏமாற்றத்தின் வேகத்தால் அங்குத் தயாரித்து வைத்திருந்த  எல்லா பொருட்களையும் அழித்து கற்சிலையாகி நின்றுவிட்டாள்.  இவ்வாறு தேவியின் சாபத்தால்  மாறிய பொருட்கள் தாம் இன்று கடலோரத்தில் பல நிறங்களில் காணப்படும் மணல்களாகும். 
நடை திறக்கும் நேரம் :  இந்த திருக்கோவில் காலை 4.30 மணி முதல் மதியம் 12.30 வரையிலும்  மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும்  திறந்து இருக்கும்.
அருகிலுள்ள விமான நிலையம் : திருவனந்தபுரம் 102 கி.மீ 
அருகிலுள்ள ரயில் நிலையம் : கன்னியாகுமரி 1 கி.மீ 
பேருந்து வசதி  : உண்டு 
தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு